பாலிவுட்டை 50 ஆண்டாக கலக்கிய காமெடி நடிகர் அஸ்ராணி மரணம்: தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு உயிர் பிரிந்தது
மும்பை: புகழ்பெற்ற மூத்த நகைச்சுவை நடிகர் அஸ்ராணி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 84வது வயதில் காலமானார். இந்திய திரையுலகின் மூத்த நடிகரான கோவர்தன் அஸ்ராணி (84), தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக, 1975ல் வெளியான ‘சோலே’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘ஆங்கிலேயர் காலத்து ஜெயிலர்’ கதாபாத்திரம் இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அவர், 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஸ்ராணிக்கு, சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மும்பை ஜுஹுவில் உள்ள பாரதிய ஆரோக்ய நிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ‘நுரையீரலில் நீர் சேர்ந்திருப்பதாக’ அவரது மேலாளர் பாபுபாய் திபா தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.
மறைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘தனது இறுதிப் பயணம் அமைதியாக நடைபெற வேண்டும்’ என்ற அவரது கடைசி விருப்பத்தின்படியே, இறுதிச்சடங்குகள் மும்பை சாந்தாகுரூஸ் மின்மயானத்தில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றன.