பாலிவுட் நடிகை போல கட்டழகு உடல் வேண்டும் தினமும் மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர்: உபி பெண் போலீசில் புகார்
காஸியாபாத்: உபி மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஷானவி தன்னுடைய கணவர் சிவம் உஜ்வால் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 6 மாதங்களுக்கு முன் எனக்கும் சிவம் உஜ்வாலுக்கும் திருமணம் நடந்தது. சிவம் உஜ்வால் அரசு பள்ளியில் உடல்கல்வி ஆசிரியராக உள்ளார். நான் குண்டாகவும், அசிங்கமாகவும் இருப்பதாக கணவர் கூறுகிறார்.
பாலிவுட் நடிகை நோரா பதேஹி போல் நல்ல உடலமைப்பு பெற வேண்டும் என கூறி தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுமாறு கணவர் கட்டாயப்படுத்துகிறார். இதனால் தினமும் உடல் பயிற்சி செய்கிறேன். உடல் நல பிரச்னையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும் சாப்பாடு போடாமல் பட்டினி போட்டுவிடுகிறார். கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அடிக்கிறார். இதனால் மனமுடைந்து எனது தாய் வீட்டுக்கு சென்றேன்.
கணவர் வீட்டில் நடந்தவற்றை பெற்றோரிடம் சொல்லி அழுதேன். பெற்றோர் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சென்ற போது மேலும் வரதட்சணை கொண்டு வருமாறு விரட்டி விட்டனர். எனக்கு விருப்பம் இல்லாத விஷயங்களை கணவர் செய்ய சொல்கிறார். அவர் நிறைய ஆபாச படங்களை பார்க்கிறார். ஏற்கனவே ரூ.24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு மாமியார் கட்டாயப்படுத்துகிறார்.
இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் பற்றி காஸியாபாத் உதவி ஆணையர் சலோனி அகர்வால்,‘‘ மாமியார் வீட்டில் பல்வேறு வகைகளில் துன்புறுத்தல் அளிக்கின்றனர். மனைவியிடம் சிலவற்றை எதிர்பார்ப்பதாகவும் அதனால் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கணவர் வற்புறுத்துகிறார். குறித்த நேரத்தில் உணவு தர மறுக்கின்றனர் என்று புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.