Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்..!!

மும்பை: புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார். தர்மேந்திரா எனப்படும் தஞ்சம் சிங் தியோல் 1935 டிசம்பர் 8ம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல் மற்றும் சத்வந்த் கவுர் ஆகியோருக்கு மகனாக பஞ்சாபி ஜாட் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப வாழ்க்கையை சஹ்னேவால் கிராமத்தில் கழித்தார். 1952 இல் இவர் பக்வாராவின் ராம்கரியா கல்லூரியில் இடைநிலை படிப்பை மேற்கொண்டார். இவர் 1960 இல் அர்ஜுன் ஹிங்கோரானியின் தில் பீ தேரா ஹம் பீ தேரே படத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் பாய் ஃப்ரெண்ட் படத்தில் இவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார். பின்னர் 1960 மற்றும் 1967 க்கு இடையில் பல காதல் படங்களில் நடித்தார்.

தர்மேந்திரா என்று அழைக்கப்படும் தரம் சிங் தியோல் இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 'பாலிவுட்டின் ஹீ-மேன்' என்று செல்லமாக அழைக்கப்படுவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும். இவர் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது.

பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார். அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.