புதுடெல்லி: ரூ.64 கோடி மதிப்பிலான போபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய தகவல்களை வழங்க கோரி அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஏ.பி.போபர்ஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.1,437 கோடி மதிப்பில் இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெற போபர்ஸ் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 1999, 2020ம் ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
1980ம் ஆண்டுகளில் நடந்த போபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் ஏற்கனவே கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு கடந்த 2011ம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் போபர்ஸ் ஊழல் குறித்த விவரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இதுவரை எந்த தகவல்களும் தரப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான தகவல்களை தனியார் புலனாய்வாளரிடம் இருந்து பெற்று தர கோரி அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.