உடல் எடையை குறைத்தால் வெகுமதி!: சீனாவில் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த நிறுவனம்; என்ன காரணம்?
பெய்ஜிங்: சீனாவில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு Arashi Vision Inc என்ற நிறுவனம் 0.5 கிலோவுக்கு ரூ.6,100 வழங்கியுள்ளது. சீனாவின் ஷென்சென் (Shenzhen) தளமாகக் கொண்ட Insta360 என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையவாசிகள் இடையே பெரும் கவனம் பெற்று வருகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி படி, Insta360 நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது உடல் எடையை குறைத்தால், அதற்கான சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது, அவர்கள் இழக்கும் ஒவ்வொரு 0.5 கிலோக்கும் 500 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.6,100) வழங்கப்படும்.
ஊழியர்கள் பலரும் இதில் கலந்து கொண்ட நிலையில், ஷி என்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதற்காக அவர் 20,000 யுவான் (சுமார் ரூ.2.47 லட்சம்) வென்றுள்ளார். 2022ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை 2 மில்லியன் யுவான் (சுமார் ரூ.2.47 கோடி) வெகுமதியாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 99 ஊழியர்கள் சேர்ந்து மொத்தம் 950 கிலோ எடையை குறைத்து, 1 மில்லியன் யுவான் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது, மேலும் ஊழியர்கள் வேலைகளைத் தாண்டி தங்களது உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.