சென்னை: உடல் உறுப்பு தானம் பெறுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் அரசு மரியாதை உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது. உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் முதல் மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் பெறப்படும் நபர்களின் உடலுக்கு அவர்களின் இறுதி சடங்குகளின் போது அரசு மரியாதை அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார சேவைகள் இயக்குனரகம் பாராட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மக்களின் மனதை ஈர்த்து உள்ளதால் 2024ல் அதிக அளவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்திருக்கிறது. 2024ல் மொத்தம் 268 நன்கொடையாளர்களிடம் இருந்து 1,500 உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாகவும், பிறமாநிலங்களுடன் ஒப்பீடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உறுப்பு தானம் செயல் திறனில் தமிழ்நாடு அரசு மிகபெரிய அளவில், அதாவது 664 விழுக்காடு உயர்வை எட்டி இருப்பதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது.
உறுப்பு தானத்தில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களின் பங்களிப்பு, தனியார் மருத்துவமனைகளை விட அதிகரித்து இருப்பதாகவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. 2024ல் தனியார் மருத்துவமனையில் பெறப்பட்ட உறுப்பு தானத்தின் விழுக்காடு 45.52 என்ற நிலையில் அரசு மருத்துவமனைகள் பெற்ற உறுப்பு தானத்தின் விதம் 54.48 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகளின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்புகளை தானமாக பெறுவதில் தமிழ்நாடு, மாற்ற மாநிலங்களுக்கு தொடர்ந்து முன்னுதாரணமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.