Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போர்டிங் பாஸ் வாங்கிய பிறகு அந்தமான் விமானத்தில் ஏற மறுத்த பெண் பயணி: ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 139 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். விமானத்தில் அந்தமானை சேர்ந்த கல்பனா (35) என்ற பெண்ணும் அந்தமான் செல்ல திருச்சியிலிருந்து வந்திருந்தார். கல்பனாவின் தாய் திருச்சியில் வசிக்கிறார். தாய்க்கு உடல்நலம் பாதிப்பு காரணமாக, அந்தமானில் இருந்து தாயை பார்ப்பதற்காக கல்பனா திருச்சி வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை விமானத்தில் அந்தமானுக்கு திரும்பி செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். கல்பனாவை வழியனுப்ப திருச்சியிலிருந்து உறவினர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கல்பனா ஆன்லைன் மூலமாக, டிக்கெட் வெப் செக்அப் செய்து, போர்டிங் பாஸ் வாங்கிவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் மனம் மாறிய அவர் அந்தமானுக்கு செல்வதற்கு திடீரென மறுத்துவிட்டார். உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் பிடிவாதமாக இருந்தார். அவரது குழந்தைகள், கணவர் அந்தமானில் உள்ளனர்.

ஆனாலும் உறவினர்களும், விமான நிலைய ஊழியர்களும் கல்பனாவை கட்டாயப்படுத்தி உள்ளே அனுப்புவதற்காக நுழைவாயிலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கல்பனா டிக்கெட் போர்டிங் பாஸ் ஆகியவற்றை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது கல்பனா, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம், நான் அந்தமான் செல்ல விரும்பவில்லை. என்னை வலுக்கட்டாயமாக போகச் சொல்கின்றனர் என்று புகார் கூறினார்.

இதையடுத்து கல்பனாவின் போர்டிங் பாஸ் மற்றும் விமான பயணத்தை ரத்து செய்து, திருப்பி அனுப்பினர். 30 நிமிடங்கள் தாமதமாக, மற்ற 138 பயணிகளுடன் சென்னையில் இருந்து விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே கல்பனா உறவினர்களோடு, சென்னையில் இருந்து மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். கல்பனா திடீரென அந்தமான் செல்ல மறுத்தது ஏன் என்று தெரியவில்லை. அது அவர்கள் குடும்பப் பிரச்னை என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.