Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீலத்திமிங்கலம் (Blue whale)

நீலத் திமிங்கலம் என்பது கடற்பாலூட்டி வரிசையைச் சேர்ந்த உயிரினம். அளவு மற்றும் எடையின்படி இதுவே உலகிலுள்ள மிகப்பெரிய விலங்கு. இது சராசரியாக 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டது. இது மிகவும் பெரிய உயிரினம் என்பதால் இதன் நிறையைச் சரியாகக் கணிப்பிட இயலாது. எனினும் சாதாரணமாக 100 அடி நீளமான நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 150 டன் அளவில் இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன். இவற்றின் தோல், நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். உலகின் எல்லாக் கடல்களிலும் இவை வசிக்கும். தனியாகவோ, சின்னக் கூட்டமாகவோ வலம் வரும். சராசரியாக 80 முதல் 90 வருடங்கள் வாழும். ஒரு தடவை ஒரு குட்டி மட்டுமே ஈனும். பிறக்கும்போதே, அந்தக் குட்டி இரண்டு டன் எடை இருக்கும். வருடா வருடம் 91 கிலோ எடைகூடிக்கொண்டே இருக்கும்.

ஒரே வயதுடைய ஆண் திமிங்கலத்தைவிடப் பெண் திமிங்கலம் அதிக நீளம்கொண்டதாக இருக்கும். இதன் நுரையீரல், 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்குப் பெரியது. இதன் நாக்கு மட்டும் மூன்று டன் எடை இருக்கும். நீரை உறிஞ்சி, ஊதும்போது 30 அடி தூரம் பீய்ச்சி அடிக்கும். இவை ‘க்ரில்’ என்ற கடல்வாழ் உயிரினங்களை விரும்பிச் சாப்பிடும். முதிர்ச்சி அடைந்த திமிங்கலங்கள் நாள் ஒன்றுக்கு நான்கு முதல் எட்டு டன் க்ரில்களை உட்கொள்ளும். இவற்றுக்கு, இரைகளைப் பிடிக்க ஆச்சரியமான அமைப்புகள் இருக்கின்றன.

கடலில் உள்ள சின்னச் சின்ன இரைகளைக்கூட இவற்றின் வாயில் இருக்கும் பலீன் என்னும் சல்லடை போன்ற அமைப்பினால் வடிகட்டிப் பிடித்துவிடும். இவற்றின் கொழுப்புக்காகவும், எண்ணெய்க்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ இந்த இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இவற்றின் பாதுகாப்புக்காக 1966ல் ‘சர்வதேசத் திமிங்கல அமைப்பு’ உருவாக்கப்பட்டது.