Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலக்கொடி திட்டத்தில் சர்வதேச தரத்தில் மேம்பாட்டு பணிகள் நிறைவு; புதுப்பொலிவுடன் மெரினா கடற்கரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சர்வதேச தரத்தில் ரூ.7.31 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மெரினா நீலக்கொடி கடற்கரையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு ஆகிய நான்கு அம்சங்களின் வாயிலாக உயர்ந்த தரங்கள் நிலை நாட்டப்படுகிறது. நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரையாக திகழ்கின்றது. அந்தவகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டினை மேலும் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சென்னை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய கடற்கரைகளை நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகளாக விரிவுபடுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியலை பேணும் வகையிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக 20 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையின் 20 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மூங்கிலால் ஆன 20 நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்புக் கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் தன்படம் எடுக்கும் 2 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தென்னை மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் அறைகள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இயக்குநர் ராகுல் நாத், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழு தலைவர் மதன்மோகன், மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் காமராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.