Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரத்ததானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ரத்ததானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், தேசிய தன்னார்வ இரத்த தான நாள் 2025 விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, தன்னார்வ இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், வாழ்நாளிலில் 50 முறைக்குமேல் தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கும், அதிக அளவில் தன்னார்வ இரத்த கொடையாளர்களை இணையவழியில் பதிவு செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தேசிய தன்னார்வ இரத்த தான தினம் இன்று மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அளவில், “தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையானது பிற மாநிலங்களுக்கு தன்னார்வ இரத்ததானத்தில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தின் கருப்பொருள் “இரத்த தானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம், ஒன்றாக இணைந்து நாம் மனித உயிர்களைக் காப்போம்” (Give Blood, Give Hope: Together We Save Lives) என்பதாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 101 அரசு இரத்த மையங்கள் மற்றும் 252 தனியார் இரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 415 இரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இரத்தம் தேவைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தரமான இரத்தம் உரிய நேரத்தில் கிடைத்திடும்வகையில் அதிநவீன மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 32 நடமாடும் இரத்த ஊர்திகளும் மற்றும் 2 நடமாடும் இரத்த தான ஊர்திகளும் (Mobile Bus) சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. 2024-25 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் இரத்த மையங்கள் மூலமாக, 9.50 இலட்சம் இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியிலுள்ள சுகாதார பொது இயக்குநரகத்தால் 2024-25 ஆம் ஆண்டில், 4.50 இலட்சம் இரத்த அலகுகள் சேகரிக்க அரசு இரத்த மையங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த ஆண்டில், உரிமம் பெற்ற அரசு ரத்த மையங்களில், தன்னார்வ இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக, 4,354 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 இலட்ச இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு 101 விழுக்காட்டை அடைந்துள்ளது. பொதுவாக மருத்துவர்கள் கூற்றின்படி நம் ஒவ்வொருவரின் உடலிலும், சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இந்த இரத்ததானத்தின்போது 350 மி.லி. முதல் 450 மி.லி. இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இரத்ததானம் செய்வதால், உடலில் புதிய அணுக்கள் உருவாகி, தானம் செய்வோரின் உடல்நலனும் காக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

தமிழ்நாட்டில், இரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RatKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இதில் இரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், இதனை பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம். தன்னார்வ இரத்ததானத்தின் அருமையை வலியுறுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள், 'தேசிய தன்னார்வ இரத்ததான தினமாக’ கொண்டாடப்படுகிறது. மாவட்ட அளவிலான, தேசிய தன்னார்வ இரத்த தான தின நிகழ்வில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களின் செயல்களை பாராட்டி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களால் கௌரவப்படுத்தப்பட்டனர்.

அதேபோல், மாநில அளவிலான நிகழ்வில், ஒவ்வொரு அரசு இரத்த மையங்களிலிருந்து, அதிக இரத்ததான முகாம்கள் மூலம், அதிக இரத்த அலகுகள் சேகரிக்க உறுதுணையாக இருந்த இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் கெளரவப்படுத்தப்படுகின்றனர். அந்தவகையில் இன்று 150 அமைப்புகள், தன்னார்வலர்கள், அமைப்புகள், மையங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை 527 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 18,264 புதிய இரத்ததான கொடையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாயிலாக கடந்த 2 மாதங்களில் மட்டும 14,847 அலகுகள் இரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகள், நியூ கல்லூரி இராயப்பேட்டை, ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 268 மாணவ மாணவியர்கள் குருதி கொடையை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்.

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தடை மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

பொதுவாக குற்றச்சம்பவங்கள் எங்கு நடந்ததோ அந்த மாநில காவல்துறையினரே நடவடிக்கையினை எடுப்பார்கள். அக்டோபர் 1 ஆம் தேதி நிகழ்வு நடைபெற்றவுடன் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் கோல்ட்ரிஃப் சிரப் என்ற மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். அதில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) அளவு 1% கூட இருக்க கூடாது என்ற நிலையில் 48% அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மத்திய பிரதேச அரசுக்கு தெரியபடுத்தப்பட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுகாதார அலுவலர்கள், ஒன்றிய அரசின் அலுவலர்கள் இது நல்ல மருந்து என்று குறிப்பிட்ட நிலையிலும் தமிழ்நாடு அரசுதான் இது நச்சுத்தன்மை அதிகம் உள்ள மருந்து என்று கண்டுபிடித்தது.

மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் இதன் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவை கழகம் (TNMSC) இந்த மருந்தினை கொள்முதல் செய்வதில்லை, தனியாரும் இந்த மருந்தினால் பாதிக்கப்படக்கூடாது என்று உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3.10.2025 அன்றே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உற்பத்தி நிறுத்துவதற்கான ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் அவர்கள் பதில் வழங்க வேண்டும் இல்லையென்றால் அவர்களின் உரிமம் இரத்த செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி குற்றநடவடிக்கைக்கான அறிவிப்பு கொடுக்க சென்றபோது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் காவல்துறையின் உதவியுடன் மத்திய பிரதேச அரசு காவல்துறை அந்த உரிமையாளரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த நிறுவனம் இனிமேல் இயங்காத வகையில் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மருந்து உற்பத்தி செய்யும் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கட்டாயமாகும். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வு செய்யும் குழுவினர் எந்த விதமான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த மருந்தினை ஆய்வு செய்யாத 2 முதுநிலை மருந்து ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வளவு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்த காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஏற்படவிருந்து உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 12,000 கோடியிலிருந்து 15,000 கோடி வரை மருந்து ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 397 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளது. தற்போது நடந்த இந்த பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும், இதனை அரசியல் ஆக்கி பொது விவாதங்களில் அதிகமாக விவாதிப்பது என்பது நாகரீகமாக இருக்காது என்பதை எதிர்கட்சித் தலைவர் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 2015 முதல் 2021 வரை CAG அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதில் சொல்ல வேண்டியர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழும திட்ட இயக்குநர் ஆர்.சீத்தாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.ஏ.சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஆர்.சுகந்தி இராஜகுமாரி, பெருநகர சென்னை மாநகராட்சி நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.மணி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.