*விவசாயிகள் பாதிப்பு
களக்காடு : திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளால் குளத்தின் நீர் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தின் கொள்ளளவு சுருங்கியுள்ளது. நாகர்கோவில் - பாபநாசம் மெயின் ரோட்டில் திருக்குறுங்குடி பெரியகுளம் உள்ளது. நம்பியாறு கால்வாய் பாசனத்தின் மூலம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
பெரிய குளத்து பாசனத்தின் மூலமாக திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்துக்கு முக்கிய நீராதாரமாகவும், மேய்ச்சல் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் பெரிய குளம் உள்ளது.
இந்நிலையில் பெரிய குளத்தின் மேற்கு பகுதியில் குளத்திற்கு தண்ணீர் வரும் பிரதான கால்வாய் பகுதியில் முற்றிலுமாக அமலைச் செடிகள், புதர் கொடிகள் மரமாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் குளத்தின் நீர் வழித்தடம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குளத்தை தூர்வாரியும் ஆண்டுகளாகி விட்டது. இதனால் ஆண்டுதோறும் கார், பிசான பருவ காலங்களில் குளத்தில் தண்ணீர் தேங்கும் போதெல்லாம், நீர் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் மண் மேடுகளாகி இருக்கிறது.
இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அமலைச் செடி, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.