Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கருப்புப் பண விவகாரம்; கேரள முதல்வர் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

திருவனந்தபுரம்: கருப்புப் பண விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன் ஈடி சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது .கேரளாவில் கடந்த 2018ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்காஞ்சேரி என்ற இடத்தில் லைப் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் குடியிருப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ரெட் கிரசென்ட் என்ற தன்னார்வ அமைப்பு இலவசமாக கட்டிக் கொடுக்க முன்வந்தது.

இதற்கான ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்காக ஒரு கட்டிட நிறுவனம், முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கரன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ. 4.40 கோடி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகன் விவேக் கிரணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

லைப் மிஷன் திட்டத்தின் மூலம் இவர் கருப்புப் பணத்தை முதலீடு செய்திருக்கலாம் என்று அமலாக்கத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கடந்த 2023ம் ஆண்டு விவேக் கிரணுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தத் தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.