மும்பை: விழா ஒன்றில் நடிகை கஜோல் அணிந்திருந்த ஆடையை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என எழுந்த தேவையற்ற சர்ச்சைகளுக்கு, சக நடிகை மினி மாத்தூர் கண்டனம் தெரிவித்துள்ளார். திரையுலகப் பிரபலங்களின் ஒவ்வொரு அசைவும், உடையும், சாதாரண தருணங்களும் கூட பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகின்றன. திரை நட்சத்திரங்களின் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி, உடல் கேலி மற்றும் காயப்படுத்தும் யூகங்களுக்கு வழிவகுக்கின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகை கஜோல், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், உடலை ஒட்டிய கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு கலந்துகொண்டார்.
ஆனால், அவரது ஸ்டைலைப் பாராட்டுவதற்குப் பதிலாக, கமெண்ட் பகுதியில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்பது போன்ற யூகங்கள் கிளம்பின. இந்த எதிர்மறை விமர்சனங்களை சிலர் கண்டித்தும் உள்ளனர். நடிகையும், தொகுப்பாளருமான மினி மாத்தூர், கஜோலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அவரது பதிவில், ‘அவரது உடலை உற்றுப் பார்க்க உங்களுக்கு என்ன தைரியம்? அவர் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ கடமையோ இல்லை. அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாது’ என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இருப்பினும், இந்த சலசலப்புகள் கஜோலின் கவனத்தை சிதறடிக்கவில்லை. அவர் தனது திரைப் பணியில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.