ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்த மசோதா பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குற்றவழக்கில் 30 நாட்கள் காவலில் இருக்கும் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதுதான் அந்த சர்ச்சைக்குரிய மசோதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகளையும், மாநில கட்சிகளையும் முடக்கும் வகையிலும், ஒரே கட்சி நடைமுறையை கொண்டுவரும் நோக்கத்தின் அடிப்படையிலும் ஒன்றிய பாஜ அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக எதிர்கட்சிகள் ஒருமித்த குரலில் கண்டனப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகும் போது ஒன்றிய அரசால் தங்களை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியையும் முடக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்தந்த கட்சித் தலைவர்களை அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்த முடியும். தங்களுக்கு ஒத்துவராத கட்சிகள் மற்றும் தலைவர்களின் மீது இந்த சட்டத்தை கொண்டு இரும்புக்கர நடவடிக்கையை தொடர முடியும்.
இப்படிப்பட்ட ஒடுக்குமுறை மசோதாவைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா அடிப்படையிலான சட்டம் கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்திருந்தால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 6 மாதங்கள் சிறையில் இருந்தார். விடுதலையான பின்னர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இந்த சட்டப்படி கெஜ்ரிவால் சிறையில் இருந்த 31வது நாளிலேயே தனது பதவியை இழந்திருப்பார்.
தற்போது நம் நாட்டில் தன்னிச்சையானதும், சுதந்திரமானதுமான அமைப்புகளாக இதுவரை பார்க்கப்பட்ட தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவை ஒன்றிய பாஜ அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக நடுநிலையாளர்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற அமைப்புகளை தனது பிடிக்குள் வைத்திருக்கும் ஒன்றிய அரசு நினைத்தால் தங்களுக்கு வேண்டப்படாத மாநில அரசுகளை, மாநில கட்சிகளை தங்களது விசாரணை அமைப்புகளின் மூலம் முடக்குவதுடன், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியும்.
ஜனநாயக முறைப்படி தேர்தலில் தங்களால் தோற்கடிக்க முடியாத ஒரு அரசியல் கட்சியை இதுபோன்ற சர்வாதிகார செயல்கள் மூலம் அப்புறப்படுத்த முடியும். இது, ஒரு ஜனநாயக நாட்டை ஆபத்தான கட்டத்திற்கே அழைத்துச் செல்லும். இந்த ஜனநாயக விரோத மசோதா தாக்கல் செய்யப்பட்ட நாளை கருப்பு நாள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் இப்படித்தான் தங்களது போக்கை துவங்குவர். தங்களின் சர்வாதிகார கட்டமைப்பிற்குள் இந்தியா என்ற ஜனநாயக ஆலமரத்தை அழிக்க முயன்றுள்ளனர்.
ஒருவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை அவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், குற்றச்சாட்டுகளின் கீழ் 30 நாள் சிறையில் இருந்தாலே பதவி பறிபோகும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சர்வாதிகார போக்கையும், ஒரேநாடு என்பதையும் தாண்டி ஒரே கட்சி என்ற அமைப்பு முறையை கொண்டுவரும் என்பது நமது ஜனநாயகத்தில் பேராபத்தைத் தான் ஏற்படுத்தும். எனவே, மக்கள் விரோத கருப்பு மசோதவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய குடிமகனின் வலியுறுத்தலும்.