*பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கருங்கல் : கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியில் தெய்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. இதில் உதயமார்த்தாண்டம் பகுதியில் உள்ள நிலத்தை குறிப்பிட்ட சிலர் ஆக்ரமித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆக்ரமிப்பை காலி செய்யவில்லை. இதையடுத்து அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
நேற்று உதயமார்த்தாண்டம் பகுதியில் இரண்டு இடங்களில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். ஒருவர் கோயில் நிலத்தில் கடை வைத்திருந்தார். அவர் கடையை காலி செய்தார். இதையடுத்து அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
தேவதாஸ் என்பவர் கோயில் நிலத்தில் வீடு கட்டியுள்ளார். வீட்டை காலி செய்ய அதிகாரிகள் வந்தபோது தேவதாஸ் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆக்ரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் அனில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் காலி செய்யவேண்டும் இல்லை என்றால் காலி செய்து சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தேவதாஸ் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.