லண்டன்: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசு, துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னரின் வரி விவகாரம், அமெரிக்க தூதர் லார்டு பீட்டர் மாண்டெல்சனின் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த வரிசையில், தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, தொழிற்கட்சியின் இளநிலை பத்திரிகை அதிகாரியாக இருந்த பால் ஓவென்டன், சக ஊழியர்களுடன் உரையாடியபோது, மூத்த பெண் எம்.பி.யான டயான் அப்போட் குறித்து பாலியல் ரீதியாகவும், இழிவாகவும் சில செய்திகளை அனுப்பியுள்ளார். இந்த செய்திகள் தற்போது வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பிரதமரின் மூத்த ஆலோசகராகவும், வியூக இயக்குநராகவும் பணியாற்றி வந்த பால் ஓவென்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ராஜினாமா குறித்து பால் ஓவென்டன் வெளியிட்ட அறிக்கையில்,
‘அந்த முட்டாள்தனமான உரையாடலால் ஏற்படும் காயத்திற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று மன்னிப்பு கோரியுள்ளார். அதேநேரம் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தச் செய்திகள் பயங்கரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண்ணான டயான் அப்போட் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை கருத்தில் கொள்ளும்போது, இதுபோன்ற கருத்துகளுக்கு அரசியலில் இடமில்லை’ என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொழிற்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது சுயேச்சை எம்.பி.யாக உள்ள டயான் அப்போட், இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.