விசாகப்பட்டினம்: ‘நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது’ என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த கட்சிப் பேரணியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று பேசியதாவது: நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம். இந்தியாவில் 20 மாநிலங்களில் பாஜ கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பாஜ ஆட்சியும் நடக்கிறது. எங்களிடம் 240 மக்களவை எம்பிக்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்எல்ஏக்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்எல்சிக்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது. முந்தைய அரசுகள் செயல்திறன் இன்றி, செயல்படாமல் இரு்தன.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அவர்கள் மறந்தனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல் மற்றும் திருப்திப்படுத்தல் இருந்தது. நாங்கள் சித்தாந்த அடித்தளத்தைக் கொண்ட கட்சி. தேர்தலில் வாக்குறுதியளித்தபடி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது, சிஏஏ மற்றும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முத்தலாக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். 3வது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜிஎஸ்டியை 4 அடுக்கு வரியில் இருந்து 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.