புதுக்கோட்டை: புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சாராத ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட எஸ்ஐடி என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இல்லையா என அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிக்கும் வகையிலும் தான் நீதிபதி கூறிய கருத்து உள்ளது. கரூர் விவகாரத்தில் தவெக, பாஜ, அதிமுக அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. இது ஆரோக்கியமான அரசியல் இல்லை.
கரூர் பிரச்னையை பயன்படுத்தி விஜய்யை தங்கள் அணிக்கு கொண்டு வர நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன் விளைவு தான் இன்று வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. தவெக, அதிமுக, பாஜ சேர்ந்து வந்தாலும், பிரிந்து வந்தாலும் எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது. பலமான அணியாக உருவாக்கினாலும் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்துள்ளது அதனால் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.