பாஜ ஆதரவுடன் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் டிசம்பரில் புதிய கட்சி: முதல்வர் ரங்கசாமிக்கு டெல்லி போடும் ‘ஸ்கெட்ச்’
* பணத்தை வாரி இறைப்பதால் ஆளும் கூட்டணி அரசின் அமைச்சர், எம்எல்ஏக்கள் அணி தாவ முடிவு
மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று சர்வதேச லாட்டரி தொழிலதிபராக திகழ்பவர்தான் கோவையை சேர்ந்த மார்ட்டின். 1988ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் லாட்டரி தொழிலை தொடங்கிய மார்ட்டின், தற்போது கர்நாடகா, கேரளா, சிக்கிம், மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களில் லாட்டரி தொழிலை நடத்தி வருகிறார்.
பூடான், நேபாளம் என சர்வதேச அளவில் தனது தொழிலை வளர்த்தார். இதனால், மார்ட்டினை ‘தி லாட்டர் கிங்’ என அழைத்தனர். இதுதான், அவரது பெயருக்கு முன்னால் லாட்டரி என அடைமொழி வர காரணம்.
மார்ட்டின் வெறும் லாட்டரி தொழிலை மட்டும் நடத்தவில்லை. இவர் தொடங்கிய ‘பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம்’ மூலம் உலகளவில் ஆன்லைன் கேமிங், சூதாட்டம், கேசினோ, தொலைக்காட்சி, ரியல் எஸ்டேட், கல்லூரி, மருத்துவமனை, வணிக வளாகம், வேளாண்மை, ஜவுளி, நூல், கட்டிட பொருட்கள் என பல்வேறு துறைகளில் அடுத்தடுத்து கால் பதித்தார்.
நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் இந்த தொழில்களை வளர்க்க ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,400 கோடியை தனது கேமிங் நிறுவனம் பெயரில் நிதியாக கொடுத்தார் மார்ட்டின். லாட்டரி தொழில் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனை செய்து அரசுக்கு ரூ.5,400 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மார்ட்டின் மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். மொத்தம் 32 வழக்குகள் உள்ளது.
இதில் சிக்கிமில் லாட்டரி மூலம் சட்டவிரோத பரிவர்த்தனை செய்து ரூ.900 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக மார்ட்டின் சிறையில் இருந்தார். இதனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க அடைக்கலம் தேடியே பாஜ பக்கம் மார்ட்டின் சாய்ந்தார். இவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் பாஜவின் கூட்டணி கட்சியான ஐ.ஜே.கே.வில் இணைந்து மாநில பொறுப்பில் நிர்வாகியாக உள்ளார்.
தமிழகத்தில் தவெகவில் ஐக்கியமாகி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் 41 பேர் பலி சம்பவத்தில் இருந்து தப்பிக்கவும், தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழிலை கொண்டு வரும் முயற்சியிலும் பாஜவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பாஜ சார்பில் வைக்கப்பட்ட டிமாண்ட்தான் ‘கூட்டணி’. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கூட்டணியில் தவெகவை இணைய வைக்க வேண்டும் என்பதுதான் அந்த அசைன்மென்ட்.
இந்த அசைன்மென்ட்டை ரகசியமாக ஆதவ் அர்ஜூனா செய்து வருகிறார். இந்த சூழலில், கோவாவை போன்று கேசினோ, டிஸ்கோ கிளப் மற்றும் லாட்டரி தொழிலை புதுச்சேரியிலும் தொடங்க திட்டமிட்ட மார்ட்டின், தனது மகன் மூலம் புது அவதாரத்தை எடுத்தார். அதுதான் மகன் மூலம் நேரடி அரசியல். அதன்படி, மார்ட்டின் மகன் சார்லஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மிஸ்ட் கால் மூலம் பாஜவில் இணைந்தார். பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் சார்லஸ், ‘ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்’ (ஜேசிஎம்) என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கினார்.
இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்ட சார்லஸ், தற்போது பாஜ கூட்டணி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசு நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ள பாஜ, துணைநிலை ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது.
இதனால் கடும் கோபத்தில் உள்ள முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியை கழற்றிவிட்டு, ஆட்சியை பிடிக்க பாஜ ஸ்கெட்ச் போட்டு வருகிறது. அந்த ஸ்கெட்சின் ‘மை’தான் சார்லஸ். இவருக்கு பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ரங்கசாமிக்கு எதிராக சார்லஸை திருப்பிவிட்டு, அவர் மூலம் ஆட்சியை பிடிக்கும் வேலையை பாஜ தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜவை சேர்ந்த ஜான்குமார் எம்எல்ஏ (தற்போதைய அமைச்சர்) ஏற்பாடு செய்திருந்த புதுவை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சார்லஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து டிசம்பரில் ஏஎப்டி மில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சார்லஸ் பேசும்போது, ‘பல தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை எனது தந்தை சேர்த்து வைத்துள்ளார்.
ஆகவே இனி சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியைச் சார்ந்தும் நான் வரவில்லை’ என கூறி அரசியலுக்கு அச்சாரம் போட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர், பணம் செலவழிப்பதை அறிந்து பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன் உள்பட 5 எம்எல்ஏக்கள் அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் பேச்சு நடத்தி வருகின்றனர். இவர்கள் சார்லஸ் பக்கம் தாவ முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ பி டீம்தான் சார்லஸ் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ‘ஜேசிஎம்’ மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக சார்லஸ் திடீரென அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் சார்லஸ் மார்ட்டின் நிருபர்களிடம் கூறுகையில், ‘மக்களை நான் தினமும் சந்தித்து வருகிறேன். மக்கள் என்னை நம்பி, என்னை தேடி வருகிறார்கள். அதனால் பயத்தில் எதிர்க்கட்சிகள் என் மீது குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் புதிய கட்சி அறிவிக்கப்படும். தொடர்ந்து பாதயாத்திரை உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டுள்ளோம்.
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். `சொல் அல்ல செயல்’ என்ற தாரக மந்திரத்துடன் ஜேசிஎம் மக்கள் மன்றம் மூலம் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறோம். தேர்தல் முடிந்தவுடன் யார் கோமாளி என்பது தெரியவரும்’ என்றார். தனது பண பலத்தால் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் திட்டம் என பல்வேறு பணிகளை சார்லஸ் செய்து வருகிறார்.
பணம் வாரி இறைக்கும் சார்லஸை கட்சி தொடங்கியதும், ரகசிய கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட பாஜ திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் சட்டப்பேரவை தேர்தலில் அதிக சீட் கிடைத்தால், வெளிப்படையாக ரங்கசாமியை கழற்றிவிட்டு, சார்லசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜ திட்டமிட்டுள்ளது.
சார்லசுக்கு தளபதியாக தற்போதைய பாஜ அமைச்சர் ஜான்குமார் செயல்பட்டு வருகிறார். சார்லஸ் நடத்தும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜான்குமார் செய்து தருவதோடு, அவருக்கு பல்வேறு அரசியல் உதவிகளையும் செய்து வருகிறார். இதனால், மக்கள் பிரதிநிதிகள் சார்லஸ் பக்கம் சாய தொடங்கி உள்ளனர்.
* மருமகனும் புதிய கட்சியா?
புதிய கட்சி தொடங்க உள்ள சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்களது குடும்பத்திலும் ஆதவ் அர்ஜூனா மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தவெகவில் உள்ள ஆதவ் ஆர்ஜூனா, விஜய்யின் பிரசார கூட்டங்களுக்கு செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆதவ் அர்ஜூனா சொல்வதை விஜய் மறுக்காமல் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதை பல்ஸ் பார்த்த பாஜ, ஆதவ் மூலம் தவெகவை கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்து வருகிறது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எப்போதுமே, தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேபோல், அவர் சொல்வதையே கட்சியில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.
இது நிறைவேறவில்லை என்றால், தனது ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனத்தின் மூலம் தனது செல்வாக்கை விளம்பரப்படுத்தி புதிய கட்சியை துவங்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, மார்ட்டினின் மகனுக்கும், மருமகனுக்கும் இடையே போட்டி நிலவுவதால், புதிய கட்சி தொடங்க உள்ள சார்லசுக்கு போட்டியாக ஆதவ் அர்ஜூனாவும் விரைவில் கட்சி தொடங்கினால் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் அவர்களது நெருக்கமான வட்டாரங்கள்.
* பணம் வாரி இறைக்கும் சார்லஸை கட்சி தொடங்கியதும், ரகசிய கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட பாஜ திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் சட்டப்பேரவை தேர்தலில் அதிக சீட் கிடைத்தால், வெளிப்படையாக ரங்கசாமியை கழற்றிவிட்டு, சார்லசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜ திட்டமிட்டுள்ளது.

