புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்தது. கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜவிடம் அக்கட்சி தோற்றது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா எழுதிய ‘கெஜ்ரிவால் மாடல்’ புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பை வெளியிட்டபோது ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களை செயல்பட அனுமதிக்கப்படவில்லை, ஆனாலும் செய்து காட்டினோம். ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன்.
துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் பணியாற்றினோம். மொஹல்லா கிளினிக்குகள், இலவச மின்சாரம், கல்வி சீர்திருத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்டன. நெருக்கடிக்கு இடையே ஆட்சி செய்ததற்காக எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்\” என்றார். இதுகுறித்து டெல்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ‘கெஜ்ரிவால் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஊழல், குழப்பம், திறமையின்மை ஆகியவற்றிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டால் மட்டுமே அவர் பெற முடியும்.
பல ஊழல் வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு நோபல் பரிசு குறித்து பேச என்ன தகுதி உள்ளது? அவர் டெல்லியை சூறையாடி விட்டார். மக்கள் நிராகரித்து விட்டனர். கெஜ்ரிவால் நோபல் பரிசு பற்றி பேசினால், நீங்கள் சிரித்து கொண்டே கேட்க வேண்டும்’ என்றார்.