பாஜவை சேர்ந்த யாரை செங்கோட்டையன் சந்தித்தார்? நயினார் கேள்வி; இன்னுமா தூக்கம் தெளியல என நெட்டிசன்கள் கலாய்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வந்தே மாதரம் 150 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுடன் வந்தே மாதரம் பாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜ. மாநில தலைவா் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜ கூறிய பிறகே பல்வேறு விஷயங்களை தான் எடுத்ததாக செங்கோட்டையன் கூறிய கருத்து தொடர்பாக எனக்கு தெரியவில்லை. பாஜவை சேர்ந்த யாரை சந்தித்தார்? என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் கூறவில்லை. இதனால் இதில் நான் கருத்து கூறினால் தவறாக போய்விடும். செங்கோட்டையன் பேட்டியில் 6 பேர் அதிமுகவை ஒன்றிணைக்க சென்றோம் என்றும் கூறியுள்ளார். அந்த 6 பேர் யார்? யாரிடம் சென்று கூறினார்கள்? என செங்கோட்டையன் முழுமையாக கூறவில்லை. இது தெளிவாக இல்லாததால் நான் கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்று எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்த பின், டெல்லிக்கு சென்ற ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், ‘அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறினார். இதுதொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நகேந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘செங்கோட்டையன் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்தது தனிப்பட்ட விருப்பம். அதிமுக விவகாரத்தில் பாஜ தலையிடாது’ என்றார். ஆனால், தற்போது செங்கோட்டையன் யாரை சந்தித்தார் என நயினார் கேட்டுள்ளதற்கு, தூக்கத்தில் இருந்து இன்னும் எழுந்திருக்கவில்லையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
* கவுன்சிலராக கூட ஆகாதவர் விஜய்
நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘நடிகர் விஜய் இன்னும் கவுன்சிலர் கூட ஆகவில்லை. கட்சி தொடங்கிய உடனேயே எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என கூறுகிறார். இது விந்தையிலும் விந்தையாக உள்ளது’ என்று கூறினார்.

