Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவின் சதிவலை

காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்கியே தீருவோம் என மல்லுக்கட்டி வரும் பாஜ, கடந்த 12 ஆண்டுகளில் அதற்கான பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டது. வடக்கே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஒவ்வொன்றாக கபளீகரம் செய்து கொண்ட பாஜ, பின்னர் காங்கிரசின் கூட்டணி கட்சிகளையும் குறி வைத்து தாக்கி வருகிறது. இதுபோல் மாநிலங்களில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளையும் சீர்குலைக்க பாஜ மேற்கொள்ளும் சதிவேலைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. இதில் பல மாநில கட்சிகள் பலியானதும் உண்டு.

இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜ எந்த எல்லைக்கும் செல்லும் என்பது கடந்த காலங்களில் பீகார் போன்ற மாநிலங்களில் நடந்த அரசியல் கூத்துகளே அத்தாட்சி. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் ஏற்கனவே ஆளும்கட்சி, எதிர்கட்சி அளவுக்கு வளர்ந்துவிட்ட பாஜ, ஆந்திராவிலும் ஒரு அவியல் கூட்டணி ஆட்சியை கொண்டுவந்துவிட்டது. தமிழகமும், கேரளாவுமே இன்று வரை பாஜவிற்கு சரியான அடித்தளம் இல்லாத மாநிலமாக தென்படுகிறது. அதிலும் தமிழகத்தில் பாஜ காலூன்ற மேற்கொண்டு வரும் முயற்சிகள் இன்று வரை பலிக்கவில்லை.

ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் அமர்ந்தால் மட்டுமே, ஒன்றிரண்டு இடங்கள் கிடைக்கும் என்ற அவலம் நிலவுகிறது. இதன் விளைவாக தமிழகத்தின் தொன்மங்களையும், சரித்திர, பண்பாட்டு சான்றுகளை சிதைக்கும் அளவுக்கு பாஜவின் வன்மம் வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒருபோதும் ஒன்றிய பாஜ அரசு உருப்படியாக தந்ததில்லை. வெள்ள நிவாரணத்திற்கான நிதி ஒதுக்கீடாக இருக்கட்டும், கல்வி நிதியாக இருக்கட்டும். எல்லாவற்றையும் தமிழக அரசு போராடியே பெற வேண்டியதிருக்கிறது.

சிலசமயங்களில் சுப்ரீம் கோர்ட் படியேறி நிற்க வேண்டியதுள்ளது. இதுஒருபுறமிருக்க, ஒன்றிய பாஜ அரசானது, தனக்கு பிடிக்காத மாநில அரசுகள் மீது ஏவி விடும் அம்புகள் ஏராளம். குறிப்பாக வில்லங்கத்திற்கு பெயர் போன ஆளுநர்களை அனுப்பி வேடிக்கை பார்ப்பது பாஜவிற்கு கை வந்த கலை. தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய சிக்கலில் தவித்து வருகிறது.

இதுமட்டுமின்றி ஒன்றிய பாஜ அரசு தனது கைப்பாவைகளாக கருதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை அவ்வப்போது தூண்டிவிட்டு, தமிழக விஐபிக்கள் மீது கறைகளை பூசுவதும் உண்டு. இந்த துறைகளின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்தே கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வலுவான அடித்தளம் கொண்டிருந்த அதிமுக போன்ற கட்சிகள், அடிமை அதிமுகவாக மாறிவிட்டன.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய தலைவர்கள் ஒன்றிய பாஜ தலைவர்களை சந்திப்பதை இறைதரிசனமாக கருதுகின்றனர். இச்சூழலில் தமிழக மக்களின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் திராவிட மாடல் ஆட்சியை அகற்ற, இப்போது தேர்தல் ஆணையத்தையும் ஒன்றிய பாஜ அரசு ஏவிவிட்டுள்ளது. ஒரு நல்லாட்சியின் மகத்துவத்தை தேர்தல் முடிவுகளும், மக்களின் வாக்குகளுமே தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் ஒன்றிய பாஜ அரசு, தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு, அதற்கு முன்னரே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் என்ற பெயரில் சில சதிவேலைகளை செய்திட துடிக்கிறது. பீகார் பிரச்னைக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தமிழகத்தில் இப்போதே வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் என புதிய பட்டியலை தயாரித்து திமுகவின் களத்தை திருட நினைக்கிறது. மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்பதை நாம் வரும் தேர்தலிலும் நிரூபிப்போம்.