விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி மாஜி முதல்வரின் இறுதிச்சடங்கு செலவை ஏற்க பாஜ மறுப்பு: ரூ.25 லட்சத்தை குடும்பத்தின் தலையில் கட்டியதால் குஜராத் அரசியலில் பரபரப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜவின் மூத்த தலைவருமான விஜய் ரூபானி, கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். கடந்த 2016 முதல் 2021 வரை முதல்வராக பதவி வகித்த அவரது இறுதிச்சடங்கு, குஜராத் அரசின் முழு அரசு மரியாதையுடன் ஜூன் 16ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்நிலையில், விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்காக செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள், பந்தல்கள் போன்றவற்றுக்கு ஆன செலவுத் தொகையான சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாயை வழங்க பாஜ தலைமை மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
செலவுத் தொகையை விஜய் ரூபானியின் குடும்பத்தினரிடமிருந்தே நேரடியாக வசூலித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்களிடம் பாஜ தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி இந்த செலவை ஏற்காது என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், கடந்த ஜூலை மாதம் சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த பிறகே இந்த விஷயம் அவர்களுக்கு தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குஜராத் மாநில பாஜவில் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுதொடர்பாக இரு மூத்த தலைவர்கள் தலையிட மறுத்துவிட்டதால் சர்ச்சை மேலும் வலுத்துள்ளது.