Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசிய பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து, அதிமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. அதிமுக - பாஜ கட்சிகள் இடையேயான கூட்டணி, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உடைந்தது. அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தரக்குறைவாக பேசியதாலேயே கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் கூறி வந்தனர்.

லோக்சபா தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக - பாஜ இடையே அவ்வப்போது வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, ‘எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். ஆனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார்.

அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார் என்று அண்ணாமலையை விமர்சித்து இருந்தார். பதிலுக்கு அண்ணாமலையும், எடப்பாடி பழனிச்சாமியை வாய்க்கு வந்தவாறு பேசி வந்தார். இந்நிலையில் தான், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும், அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தியும், அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழவந்தண்டலம் பேருந்து நிலையம் அருகே நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, அவர்கள் கையில் அண்ணாமலை உருவத்தை கேலியாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தை துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்தும், உருவ பொம்மைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.