பாஜவை நம்பி வந்தவர்களை பொதுவெளியில் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது: நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை சூடு; ஓபிஎஸ்சையும் விரைவில் சந்திப்பேன் என பேட்டி
சென்னை: பாஜவை நம்பி வந்த தலைவர்களை பொது வெளியில் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை சூடு வைத்துள்ளார். இது பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவிகீதா ராதா மறைவையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: டிடிவி.தினகரனை சந்தித்தது உண்மை தான். தமிழகத்தில் அரசியல் களம் இன்றைக்கு எப்படி இருக்கிறது. அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது. அவரின் பார்வை எப்படி இருக்கிறது என்றும், திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்பதை எல்லாம் பேசினோம். எப்போதும் நானும், பாஜவும் டிடிவியுடன் நட்புணர்வை அப்படியே தொடர்கிறோம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நவம்பரில் முடிவு எடுக்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். காத்திருப்போம்.
சின்ன சின்ன மனஸ்தாபங்கள் எல்லாமே கடைசியாக தேர்தல் களத்தின் சூடு வரும் போது, அது மாறும் என்பது எனது நம்பிக்கை. டிடிவியாக இருக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் எல்லா தலைவர்களையும் எப்போதுமே மதிக்கக்கூடியவன் நான். 2024ல் நம்மை நம்பி வந்தவர்கள். பொதுவெளியில் பேசும் போது அவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அடிக்கடி சந்தித்து பேசும் போது நட்புணர்வு தொடர்ந்து இருக்கும். சந்திக்கவே மாட்டேன். நீங்கள் ஒரு பக்கம், நான் ஒருபக்கம் நீங்கள் என்று நினைக்க கூடாது.
அரசியலில் நிரந்தர எதிரிகள், நண்பர்கள் இல்லை என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் கூட்டணிகள் மாறும். தலைவர்கள் மாறுவார்கள். ஆனால், ஒவ்வொருவர் சந்திப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதன் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு இருந்தது. டிடிவி. தினகரன் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருடைய கட்சியின் கருத்து. ஆனால் நான் இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தாமல் இருக்க முடியாது. அதை நான் தவறிவிட்டால் அது சரித்திரத்தின் பிழையாக மாறிவிடும். அதற்கு நான் காரணமாக இருந்துவிடக் கூடாது.
அவர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். நாம் அவரிடம் ஒரு மாற்று கருத்தை வைப்பதில் தவறு இல்லை. ஏற்றுக்கொள்ளுவதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரின் விருப்பம். அதனால் பொறுத்திருப்போம். அதேபோல என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க இருக்கிறேன். அவர் சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும் சந்திப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜயின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் ‘பாஜவின் பி-டீம்’ என்கிறார்கள். விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார். சபாநாயகர் அப்பாவு, பாஜ போபியாவில் இருந்து வெளியே வர வேண்டும்.
கேரளத்தில் தொடர்ந்து பாஜ தொண்டர்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜவினரை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024-25ம் ஆண்டில் மட்டும் ரூ.421 கோடி காணிக்கையாக பக்தர்கள் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளிலும் தலா ரூ.350 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு பெயர் பிக்-பாக்கெட் இல்லாமல் வேறென்ன?. பினராயி விஜயன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர். கடவுள் இல்லை என்பவர். அவர் ஏன் ஐயப்பனுக்கு மாநாடு நடத்த வேண்டும். நடிகர் ரஜினிகாந்தை நான் மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பேன். அதை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். ஆன்மிகத்தின் அடிப்படையில் ஆத்மார்த்தமான நட்பு எங்களுக்குள் உள்ளது. எனக்கு ஆன்மிகத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்வார். யோகா போன்ற பல விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதிப்போம். நான் அவரை ஒரு குருவாக பார்க்கின்றேன். ஒரு தலைவராக எனக்கு அறிவுரை கூறுவார். அதனால் தயவு செய்து இதனை அரசியல்படுத்தாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தனிக்கட்சி ஆரம்பிப்பதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு, அண்ணாமலை, “ஆரம்பித்தால் சொல்கிறேன்” என்று பதில் அளித்தார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் அதிமுகவில் இருந்தபோதே இவர்கள் இருவர் மட்டுமே ஜெயலலிதாவிடம் தவறாக போட்டுக் கொடுத்து நயினார் நாகேந்திரனை கட்சியில் ஓரங்கட்டியிருந்தனர். இதனால் ஆரம்பத்தில் இருந்தே இவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நயினார் வேண்டும் என்றே தங்களை அவமானப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர். தற்போது டிடிவி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அண்ணாமலை, தற்போது நயினாரை கண்டிக்கும் விதமாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.