சென்னை: பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன்(80) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள வீட்டிலிருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
தஞ்சையை சேர்ந்த இல.கணேசன் 1945ல் பிறந்தார்.ம.பி.யில் இருந்து 2016ல் மாநிலங்களவைக்கு தேர்வானார். மணிப்பூர் ஆளுநராகவும், மேற்குவங்கத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். பாஜக மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.
இல.கணேசன் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நிலையில்,2023 பிப்ரவரி மாதம் முதல் நாகலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை வருவது வழக்கம். சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நகுறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 8ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இல.கணேசன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து இல.கணேசன் உடல் தியாகராயர் நகர் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.