டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பாஜக எம்.பி. அனில் பலுனி நூலிழையில் உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பெருமளவில் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும், கர்வால் தொகுதி எம்.பி.யுமான அனில் பலுனி, சமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பார்வையை முடித்துவிட்டு நேற்று மாலை ரிஷிகேஷ் நோக்கி பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது, தேவ்பிரயாக் அருகே, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பாக திடீரென ராட்சத மலைப்பகுதி சரிந்து விழுந்தது. கற்களும், மண்ணும் சரிந்து விழும் பயங்கரமான அந்த தருணத்தில், அவரும் அவரது குழுவினரும் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி நூலிழையில் உயிர் தப்பினர். இந்த பதறவைக்கும் காணொலியை தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.