பெண் விவசாயியை அவமதித்த வழக்கு; பாஜக எம்பி கங்கனாவுக்கு நீதிமன்றம் கெடுபிடி: நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு
பதிண்டா: விவசாய மூதாட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என பஞ்சாப் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச் சேர்ந்த 73 வயதான விவசாய மூதாட்டி மஹிந்தர் கவுர் குறித்து நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், மஹிந்தர் கவுரை, ‘இதுபோன்ற பெண்கள் ரூ.100க்கு போராட்டத்தில் கலந்துகொள்ளக் கிடைப்பார்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி மஹிந்தர் கவுர், கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கங்கனா தாக்கல் செய்த மனுக்களை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு திரும்பப் பெறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் கங்கனா ரனாவத் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று பதிண்டா நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனா தரப்பில் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதற்கு மஹிந்தர் கவுர் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், கங்கனா ரனாவத்தின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது, கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.