மபி பாஜ அமைச்சர் சர்ச்சை ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயரின் ஏஜென்ட்: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்
ஷாஜாபூர்: மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ‘‘ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் ஆங்கில கல்வி மூலம் மக்களின் நம்பிக்கையை மாற்ற முயற்சிகள் நடந்தன. கல்வி நிறுவனங்கள் மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
இதற்காக பல போலி சமூக சீர்த்திருத்தவாதிகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அவர்களில் ஒருவர் தான் ராஜாராம் மோகன் ராய். அவர் ஆங்கிலேயர்களின் ஏஜென்டாக செயல்பட்டார். இதைத் தடுத்து தைரியமாக செயல்பட்டு பழங்குடி சமூகத்தை பாதுகாத்தவர் பிர்சா முண்டா மட்டுமே. மிஷினரி பள்ளிகள் மூலம் மத மாற்றம் நடப்பதை அறிந்த பிர்சா முண்டா, அக்கல்வியிலிருந்து வெளியேறி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடினார்’’ என்றார். இந்த பேச்சு சர்ச்சையானதையடுத்து, அமைச்சர் மன்னிப்பு கேட்டார்.


