Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி: பழங்குடியின அமைப்பு போராட்டம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலருக்கு பாஜக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரைக் கைது செய்யக் கோரி பழங்குடியின அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு, பாஜக எம்பி ஒருவரை அவதூறாகப் பேசியதாகக் கூறி, பழங்குடியினரின் ‘ஜெய் ஆதிவாசி யுவ சக்தி’ (ஜெய்ஸ்) அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அன்று முதல் இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் நீடித்து வருகிறது. இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் சித்தி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர், பாஜகவின் சிலாவாத் மண்டல் தலைவர் அஜய் யாதவ் மீது பாலியல் சீண்டல் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். தன்னை அஜய் யாதவ் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதைத் தடுத்தபோது கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் காவலர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, ‘ஜெய்ஸ்’ அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அஜய் யாதவை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

ஆளுங்கட்சி பிரமுகர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம், மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அஜய் யாதவ் மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.