முன்னாள் எம்எல்ஏவான பாஜ நிர்வாகி செங்கோட்டையனுடன் தவெகவில் ஐக்கியம்: சேலத்தில் கட்சிக்காரர்கள் கடுப்பு
சேலம்: பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ, எங்களுக்கே தெரியாமல் செங்கோட்டையனுடன் விஜய் கட்சிக்கு ஓடிவிட்டார் என்று சேலத்தில் பாஜ நிர்வாகிகள் குமுறிவருகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்ேகாட்டையன் நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று சென்னையில் தனது ஆதரவாளரான முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோருடன், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களில் பெரும்பாலானவர்கள் செங்கோட்ைடயனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவராக சேலம் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலமும், செங்கோட்டையனுடன் சென்று விஜய்கட்சியில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம். பாஜகவில் இணைந்த அவருக்கு அக்கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகவும் வெங்கடாசலம் இருந்தார். இந்நிலையில் செங்கோட்டையனுடன் சென்று விஜய் கட்சியில் அவர் இணைந்தது சேலம் பாஜக நிர்வாகிகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வரை கட்சிபதவியில் நீடித்தவர், எங்களுக்கு தெரியாமல் ஓடிச்சென்று விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார் என்று நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.
இது குறித்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் கூறுகையில், ‘‘ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம், பாஜகவில் இணைந்த பிறகு மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்னாள் எம்எல்ஏ என்ற முறையில் கட்சியினர் அவரை நல்லமரியாதையோடு நடத்தினர். ஆனால் எங்களுக்கே ெதரியாமல் செங்கோட்டையனுடன் ஓடிச்சென்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார்’’ என்றார்.
7வது கட்சிக்கு தாவல்
அதிமுக, தேமுதிக, பாஜக என்று பல்வேறு கட்சிகளில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், தற்போது வேறு வழியில்லாமல் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இந்த வகையில் இது அவர் இணைந்துள்ள 7வது கட்சி என்று அவரை நன்கறிந்தவர்கள் கமென்ட் அடிக்கின்றனர்.

