ஆக்ரா: ஆபாச வீடியோ அனுப்பிய பாஜக நிர்வாகிக்கு செருப்படி கொடுத்த பெண்கள், அவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்திற்கு உட்பட கண்டவுலி பகுதியின் பாஜக பூத் தலைவராக ஆனந்த் சர்மா என்பவர் செயல்பட்டு வந்தார். இவர், கட்சியின் பெண் தொண்டர்களுக்கு தொடர்ந்து ஆபாசமான வீடியோக்களையும், தகவல்களையும் தனது செல்போன் எண்ணிலிருந்து அனுப்பி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர், உள்ளூர் பாஜக மகளிர் அணி மண்டலத் தலைவரின் சகோதரர் என்றும் சொல்லப்படுகிறது. பலமுறை அவரை எச்சரித்தும், அவர் தனது ஆபாச செயலை நிறுத்தவில்லை.
இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாஜகவின் பெண் தொண்டர்கள் கடும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்தனர். இந்த நிலையில், பொறுமையிழந்த உள்ளூர் பெண் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, ஆனந்த் சர்மாவின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தனர். அங்கு அவரை சுற்றி வளைத்து, செருப்புகளால் அடித்தும், கன்னங்களில் பளார் பளார் என்று அறைந்தும் சரமாரியாகத் தாக்கினர். இந்த முழு சம்பவமும் அங்கிருந்த ஒருவரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.