பாஜவின் முழு கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையமும் பாஜவும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
சென்னை: பாஜவின் முழு கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் உள்ளது, தேர்தல் ஆணையமும் பாஜவும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. எம்.பி. ரவிக்குமார் , விசிக எம்எல்ஏக்கள்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு, துணை பொது செயலாளர் வன்னி அரசு மற்றும் 500க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் திருமாவளவன் பேசியதாவது: பாஜ உள்நோக்கத்துடன் தான் எஸ்ஐஆரை கையாள்கிறது. மோடி, அமித்ஷா சராசரி அரசியல்வாதிகள் அல்ல, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவை அடியோடு புரட்ட பார்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குது, இடதுசாரிகள் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, திராவிட அரசியலைப் பேசக்கூடிய கட்சிகள் இல்லை என்பதை உருவாக்குவது என்பது தான் பாஜவின் செயல் திட்டம்.
மேலும் இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும், இந்தியாவில் ஒரே மொழிதான் ஆள வேண்டும், இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சியியல் கோட்பாடாக இருக்க வேண்டும் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பும் இந்தியாவை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதிமுகவை பாஜ எப்படி கையாள்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். அதிமுக கட்சி விவகாரத்தை தான் டெல்லியில் பேசினார்கள் என செங்கோட்டையன் கூறினார். தேர்தல் தில்லு முல்லுகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கும் பாஜ. பாஜவின் முழு கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையமும் பாஜவும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகம் தீவிரமாக எதிர்த்தது, எனவே மறைமுகமாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தேசிய குடிமக்கள் பெயரேட்டை உருவாக்கவே எஸ்ஐஆர் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தில்லு முல்லுகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கும் பாஜ, பாஜவின் முழு கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையமும் பாஜவும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளது, மனுதர்மத்தையும், கோட்சேவின் கனவையும் நிஜமாக்குவது தான் பாஜவின் இறுதி லட்சியம், பன்முகத்தன்மை, மதசார்பின்மை, அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜவின் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.



