சென்னை: பாஜவின் வெற்றிக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை திருப்புகிற வகையில் பதில் கூறுவது பொறுப்பற்ற செயலாகும்.
நடைபெறவுள்ள பீஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துவிட்டது சுதந்திரமான தேர்தலுக்கு விடப்பட்ட சவாலாகும். இந்த மறுப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக நம்புவதற்கு இடமிருக்கிறது. பாஜவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது.
எனவே தேர்தல் முறைகேடு குற்றங்களுக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமாக இருப்பதால் அதை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். ராகுல் காந்தி தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் இன்று(திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும்.