சென்னை: பாமகவில் தந்தை, மகன் மோதலுக்குப் பின்னர் அன்புமணியுடன் பாஜ தேர்தல் பொறுப்பாளர் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். பாஜ கூட்டணியில் பாமக இருந்து வந்தது. தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையில் ஒரு மணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. அதில் பாஜ அணியில் பாமக போட்டியிட்டது.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வாறு தந்தை, மகன் மோதல் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பனையூரில் உள்ள அன்புமணியின் வீட்டிற்கு பாஜ தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசினார்.
அப்போது தேர்தல் கூட்டணி குறித்தும், ராமதாசுடன் உள்ள மோதல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அமித்ஷா, உத்தரவின்பேரிலேயே அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம், அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது அன்புமணியுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் பாமகவை உடனடியாக கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.