பாஜவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து பீகாரிலிருந்து ஒரு வாக்கு கூட திருட அனுமதிக்க மாட்டோம்: யாத்திரையில் ராகுல் காந்தி உறுதி
நவாடா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டுள்ளதை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டுள்ளார். 16 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையின் 3ம் நாளான நேற்று கயாவின் வஜீர்கஞ்சில் இருந்து தொடங்கிய பேரணி நவாடாவை அடைந்தது. அங்கு பகத்சிங் சவுக்கில் நடந்த கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி ராகுல் காந்தி பேசியதாவது:
நீங்கள் போராடி பெற்ற அரசியலமைப்பு சட்டத்தால் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர்கள் உங்களிடமிருந்து பறிக்கப் பார்க்கிறார்கள். வாக்குகளை திருட பாஜவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்துள்ளது. அவர்கள், மகாராஷ்டிரா, அரியானா, மபியில் வாக்குகளை திருடிவிட்டனர். இப்போது பீகாரில் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் புதிய முறையில் வாக்கு திருட்டை செய்கிறார்கள். உங்கள் கண் முன்பாக இந்த திருட்டை அரங்கேற்றுகிறார்கள்.
ஆனால் நானும் தேஜஸ்வியும், இங்குள்ள மகாத்பந்தன் தலைவர்கள் பீகாரில் இருந்து ஒரு வாக்கு கூட திருடுவதை அனுமதிக்க மாட்டோம். முதலில் உங்கள் வாக்காளர் அட்டை பறிபோகும். பிறகு ரேஷன் அட்டை பறிபோகும். பின்னர் உங்கள் நிலம் அதானி, அம்பானியிடம் ஒப்படைக்கப்படும். இந்த நாடு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொந்தமானது.
அம்பானி, அதானி போன்ற சில கோடீஸ்வரர்களுக்கு அல்ல. தவறான சட்டங்கள், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவை சில கோடீஸ்வரர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் உள்ளன. நீங்கள் பணத்தையும் வளத்தையும் தருகிறீர்கள். ஆனால் இந்த நாடால் உங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. இது மாற வேண்டும். அதனால்தான் நாங்கள் இந்த யாத்திரையைத் தொடங்கி உள்ளோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
* அடுத்த பிரதமர் ராகுல்
யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் ஓட்டுகளை திருடப் பார்க்கின்றனர். அதை நாங்கள் நடக்க விடமாட்டோம். பீகாரில் உடனடியாக நிதிஷ் அரசு மாற்றப்பட வேண்டும். இந்த பழமையான, குழப்பமான அரசை நீக்குவதென இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும். அடுத்த மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தியை பிரதமராக்கவும் உறுதி ஏற்க வேண்டும்’’ என்றார்.
சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ்வால் ஆர்ஜேடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தேஜஸ்வியின் மூத்த சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ் தனது எக்ஸ் பதிவில், ‘‘கட்சியில் உள்ள சில துரோகிகள் எனது அரசியல் வாழ்க்கையை அழித்துவிட்டனர். அவர்கள் இப்போதும் உன்னை (தேஜஸ்வி யாதவ்) சுற்றி உள்ளனர். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் மோசமான முடிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என தேஜஸ்வி யாதவை எச்சரித்துள்ளார்.