பாஜவின் கிளை அலுவலகமாகி மாறி வாக்குத் திருட்டு குற்றவாளிகளை காப்பாற்றும் தேர்தல் ஆணையம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆலந்த் தொகுதியில் 5,994 பெயர்கள் படிவம் 7ல் மோசடி செய்யப்பட்டு போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் அவர்களுக்கே தெரியாமல் நீக்கப்பட்டு மோசடி நடந்தது. இதுதொடர்பாக 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதமே வழக்கு பதியப்பட்டது. வாக்கு மோசடி நடந்திருப்பதற்கான சான்று இது. இந்த வழக்கை சிஐடி விசாரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் இப்படியான மோசடியே நடக்கவில்லை என்றும், அந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி போலீசார், இணையதளத்தில் படிவம் 7ல் மோசடி செய்து போலி வாக்காளர்களை சேர்த்த நபர்களைக் கண்டுபிடிக்கும் முனைப்பில், இணையதளம் பயன்படுத்தப்பட்ட ஐபி அட்ரெஸ் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முக்கியமான துருப்புச்சீட்டாகத் திகழும் முக்கியமான தகவல்களை தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. இந்த வழக்கில் தவறு செய்தவர்களைத் தேர்தல் ஆணையம் காப்பாற்றுகிறது. பாஜவின் வாக்குத் திருட்டுக்கான கிளை அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
நாடு முக்கியம் பிரதமரே...
கலபுர்கியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மோடியும் டிரம்ப்பும் நண்பர்கள். ஆனால் மோடி நம் நாட்டிற்குத்தான் எதிரியாக மாறிவிட்டார். நாட்டின் சூழலையே கெடுத்துவிட்டார். டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்துள்ளார். 50 சதவிகித வரி விதிப்பால் இந்திய மக்களும், தொழில்முனைவோரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் (மோடி) உங்கள் சித்தாந்தத்தின் வழியில் நடந்துகொள்ளுங்கள்; ஆனால் நாட்டு மக்களைக் காப்பாற்றுங்கள். நாடுதான் முக்கியம். உங்களுக்கும் டிரம்புக்கும் இடையேயான நட்பு அடுத்துத்தான். இந்தியா பல தசாப்தங்களாக நடுநிலைமை மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றிவருகிறது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும். அதே பாதையில் அது தொடர வேண்டும் என்று கூறினார்.