வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், ‘‘தவெகவுடன் அதிமுக கூட்டணி இணைந்த பின்னர் பாஜவை அதிமுக கழற்ற விட்டு விடுவார்கள் என டிடிவி.தினகரன் கூறியிருக்கிறாரே’’ என்றனர். அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கையில், ‘‘ஒவ்வொருவரின் சொந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது. அவர் மீது என்ன வெறுப்பு என எனக்கு தெரியாது. என் மீதும் சில வெறுப்புகளை தெரிவித்தார். தற்போது அது இல்லை.
தனது சொந்த பிரச்னைகளுக்காக கட்சிகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, அஸ்ரா கார்க் தற்போதுதான் பொறுப்பெடுத்துள்ளார். அவரது விசாரணைக்கு பின்பே கருத்து கூற முடியும். ஒரு நபர் கமிஷன் மீது குறை சொல்லக்கூடாது. தூத்துக்குடி விவகாரம் குறித்து கமிஷன் அமைத்தார்கள். அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது.
வழக்கறிஞரை திருமாவளவன் ஆட்கள்தான் அடித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆர்எஸ்எஸ் - பாஜதான் காரணம் என்னும் சொல்லும் திருமாவளவன் எங்கள் கூட்டணிக்கு வந்து விடலாம். பாஜ கூட்டணியில் தவெக வருகிறதா என்கிறீர்கள். பாஜ கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனவரி மாதத்திற்கு பின்னரே கூட்டணி முடிவுக்கு வரும். இவ்வாறு கூறினார்.