எத்தனை அடிமைகள் வந்தாலும் பாஜ கால் வைக்க முடியாது கை நம்மை விட்டு போகாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வேடசந்தூர்: எத்தனை அடிமைகளை ஒன்றாக சேர்த்து வந்தாலும் பாசிச பாஜ, தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. கை நம்மை விட்டு போகாது. என வேடசந்தூர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: இந்தியாவில் அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அடிமைகளும், பாசிஸ்ட்டுகளும், சங்கிகளும், ‘இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும். எப்படியாவது தமிழ்நாட்டை அபகரிக்க வேண்டும். கைப்பற்ற வேண்டும்’ என்று பல்வேறு திட்டங்களை தீட்டுகின்றனர். ஒன்றிய பாசிச பாஜவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா என பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
புது அடிமைகள் நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகளை ஒன்றாக சேர்த்து வந்தாலும், கடைசி திமுக தொண்டர் இருக்கும் வரை பாசிச பாஜ தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. கடைசி தொண்டர் கூட உங்களை ஓட, ஓட விரட்டுவார். ஏற்கனவே ஜெயலலிதாவை மறந்த எடப்பாடி தற்போது எம்ஜிஆரையும் மறந்து விட்டார். எடப்பாடிக்கு அமித்ஷா முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி மாவட்டம் செல்கிறேன். இந்த 2 நாட்களில் எங்கு சென்றாலும் அன்புடன், எழுச்சியுடன் வரவேற்பு உள்ளது. இந்த திருமண விழா அரங்கிற்கு வாகனத்தில் இருந்து வரும் போது கூட அதே அன்பு, எழுச்சி இருந்தது எனக்கு உற்சாகத்தை தந்தது. கை நம்மை விட்டு போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன். இவ்வாறு பேசினார்.
* துணை முதல்வருடன் செல்பி எடுத்து உற்சாகம்
திண்டுக்கல்லில் நேற்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பழநி ரோடு வழியாக சென்றவர் தாடிக்கொம்பு சாலை, ஆர்.எம்.காலனி, நேருஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் துணை முதல்வருடன் ைககுலுக்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, துணை முதல்வர் பெண்களிடம் `மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வருகிறதா’ என்று கேட்டறிந்தார்.