Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்தார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல்லையில் நேற்று பாஜக கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசை அகற்றுவோம் என்றும் அ.தி.மு.க. - பாஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையோடு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற இருவரில் ஒருவராக இருப்பவர் அமித்ஷா. ஒவ்வொரு முறையும்அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் பா.ஜ.க., கூட்டம் நடத்தலாம், பேரணி நடத்தலாம். ஆனால், தமிழநாட்டு மக்களின் ஆதரவை பெறுவதற்கு பதிலாக வெறுப்பையே பெற முடியும். அமித்ஷாவின் கடந்த கால வரலாறு அறிந்தவர்கள் இவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறுகிற அமித்ஷா, அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளின் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. - பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களால் நிச்சயம் நிராகரிக்கப்படும். அ.தி.மு.க. கட்சியினர், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராமல் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று முனகிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அ.தி.மு.க. தலைமையோ உள்துறை அமைச்சரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொருந்தாக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்படுவது உறுதி.

தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளதாக கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எந்த குற்றச்சாட்டையும் எவராவது முன்வைத்து எந்த வழக்கும், எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இன்றைக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிலும் பெரும்பாலான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களால் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தவிர, தி.மு.க. ஆட்சியில் இதுவரை எந்த ஊழலும் ஆதாரப்பூர்வமாக எவரும் கூறியதில்லை. ஆனால், 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் விமான ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் முறைகேடுகள், தேர்தல் நன்கொடை பத்திர மோசடி, நெடுஞ்சாலைத்துறையில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறிய பிறகும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல, அதானி - அம்பானி போன்ற சில தொழிலதிபர்களுக்கு அரசு மூலம் சலுகைகள் வழங்கி வருமானத்தை பெருக்கி சொத்து குவித்ததை விட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும்? பா.ஜ.க. ஆட்சி வருவதற்கு முன்பு உலக பணக்காரர்கள் வரிசையில் 209-வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு மூன்றாவது இடத்தில் உலக பணக்காரராக மாறியதற்கு பிரதமர் மோடி தானே பொறுப்பு? அதானியின் சொத்து குவிப்பிற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு மோடி தயாரா? இன்றைய மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39 சதவிகிதம் பேர் இருப்பதை அமித்ஷாவால் மறுக்க முடியுமா ? அவர்கள் மீது சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 130-வது அரசமைப்புச் சட்ட திருத்தம் அமல் செய்யப்படுமா ?

இன்றைய மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர் மீது வழக்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்குகளை திருடி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் அவதூறு கட்டுக்கதைகளை தமிழ்நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நீட் திணிப்பு, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்காக பரிந்து பேசும் அமித்ஷா, அதற்காக ரூபாய் 20 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கி விட்டு, 24,000 பேர் பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 609 கோடி ஒதுக்கியவர் தமிழ் மொழிக்காக, திருக்குறளுக்காக அமித்ஷாவின் பேச்சு நீலிக் கண்ணீராக இருக்குமே தவிர, அதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று கூறினார்.