Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லைக்கு அமித்ஷா வருகை: திமுக பரபரப்பு போஸ்டர்

நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மண்டல அளவிலான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நெல்லையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதை முன்னிட்டு, நெல்லை மாநகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நெல்லை தச்சநல்லூர் புறவழிச்சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் திடலில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

இன்று காலை கேரளாவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மத்திய அமைச்சர் அமித்ஷா மதியம் 2:50 மணியளவில் தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 3:10 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். அங்கிருந்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்கிறார். பின்னர், கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் மாநாடு நடைபெறும் திடலுக்கு 3:25 மணியளவில் சென்றடைகிறார். அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பின், மாலை 5 மணிக்கு மீண்டும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்குச் சென்று, ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து டெல்லிக்குப் புறப்படுகிறார்.

அமித்ஷாவின் வருகையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா மேடையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திமுக போஸ்டர்;

இந்நிலையில், நெல்லையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவை தமிழர் ஆளலாமா? என அமித்ஷா ஓடிசா சட்டமன்ற தேர்தலின் போது பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டும், ‘மறக்கமாட்டோம்! மறக்கவே மாட்டோம்!’ என்ற தலைப்புடன் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில், அமித்ஷாவின் புகைப்படம் பெரிதாக இடம்பெற்றுள்ளது. அதன் கீழே, ஒடியா பேசக்கூடியவர்தான் ஆள வேண்டும்’ என ஒடிசா தேர்தல் பரப்புரையின்போது அமித்ஷா பேசியதாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் நெல்லையில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. ‘தமிழர் ஒருவர் ஒடிசாவை ஆள்வதைக்கூட விரும்பாத அமித்ஷா எப்படி தமிழகத்திற்கு வழிகாட்டப் போகிறார்?’ என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பும் வகையில் இந்த போஸ்டர்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.