நெல்லை: நெல்லையில் இன்று நடக்கும் பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை வருகிறார். இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பணியை துவக்கும் வகையில் மண்டலம் வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக நெல்லையில் இன்று (22ம் தேதி) மாலை பாஜ பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜ நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக அமித்ஷா இன்று கொச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம், பகல் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடை வந்தடைகிறார்.
பின்னர் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் சென்று தேநீர் விருந்தில் 20 நிமிடம் பங்கேற்று விட்டு, மாலை 3.25 மணிக்கு நெல்லை தச்சநல்லூர், பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். அவரது வருகையை முன்னிட்டு சிஆர்பிஎப், தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் இணைந்து நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.