பாஜ கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி பயணம்: அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்
சென்னை: பாஜ கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்கிறார். அவர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். தமிழக பாஜ தலைமையிலான அணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இணைந்துள்ளது.
இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் திடீரென விலகுவதாக அறிவித்தார். அப்போது, அவர் கூட்டணியில் உள்ள தலைவரான என்னை சந்திக்க பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அனுமதி வழங்குவது இல்லை. தமிழகம் வந்தால் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களுக்கு சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், எனக்கு அனுமதி வழங்குவது இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். மேலும் அவர் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்தும் குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்நிலையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி.தினகரனும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். அப்போது டிடிவி.தினகரன் விலகியதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்றும், அவர் அகங்காரத்துடன் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், “என்னுடைய செயல்பாடுகளால்தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை, எனக்கு விளங்கவில்லை.
திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல” என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறுவது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி அமைத்தால் தான் முடியும். அதே நேரத்தில் பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் எடப்பாடிக்கு எதிராக மேலும் 3 முன்னாள் அமைச்சர்கள் குரல் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவை பாஜ, ஆர்எஸ்எஸ் தான் உடைக்க பார்க்கிறது என்றும் குரல் எழுந்துள்ளது. எடப்பாடியின் செல்வாக்கை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்கிறார். அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜ கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.