Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவுடன் கூட்டணி தவறில்லை: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தஞ்சை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது தஞ்சையில் நேற்றிரவு அவர் பேசியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிக திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வரவிடாமல் தடுத்து ஒன்றிய அரசுடன் பேசி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டு வந்தோம்.

வடசேரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான முயற்சியையும் அதிமுக அரசு தடுத்தது. அதிமுகவை உடைப்பதற்கு, பிளக்க எத்தனையோ அவதாரம் எடுத்தார்கள். அது மக்கள், கட்சி நிர்வாகிகளுடன் தூள் தூளாக்கப்பட்டது. நானும் ஒரு விவசாயி தான். விவசாயி நாட்டை ஆளக்கூடாதா? அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தவறு? மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம்.இவ்வாறு பேசினார்.

தஞ்சை மாவட்டம் மணக்கரம்பை ஊராட்சி பள்ளி அக்ரகாரம் ரவுண்டானா பகுதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஹோட்டல் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி வருகையால் அதிமுக சார்பில் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானாவில் புல்தரை மற்றும் கம்பிகளை சேதப்படுத்தி விளம்பர பலகைகள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரவுண்டானா முழுவதும் சேதம் அடைந்தது.

நேற்றிரவு தஞ்சை ஓட்டலில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அந்த ஓட்டலில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.

மூதாட்டி மயக்கம்;

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது கூடலூரை சேர்ந்த லெட்சுமி(60) என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு போலீசார் முதலுதவி செய்து தண்ணீர், பிஸ்கட் வாங்கி கொடுத்தனர். விசிறி விட்டு அவரை அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.