பாஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்: அரசியலில் விளையாட மாட்டார் என பிரதமர் மோடி நம்பிக்கை
புதுடெல்லி: பாஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியலில் எப்போதும் விளையாட்டு காட்டமாட்டார் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜ நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை முறைப்படி வேட்பாளராக அறிவிப்பதற்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி முறைப்படி தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ‘‘தமிழக முன்னாள் பாஜ தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் 40 ஆண்டு கால நட்பு உள்ளது.
அவரும் என்னைப் போலவே முதலில் ஆர்எஸ்எஸ்சில் இருந்து பின்னர் ஜனசங்கத்தில் சேர்ந்து அதைத் தொடர்ந்து பாஜ கட்சிக்கு வந்தவர். தலைமுடி கருப்பாக இருந்த காலகட்டத்தில் இருந்து எங்கள் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் உண்டு. சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் திறமையானவர். தகுதியானவர். விளையாட்டு வீரர். விளையாட்டில் நிறைய ஆர்வம் கொண்டவர். ஆனால் அரசியலில் எந்த விளையாட்டையும் காட்டாதவர்’’ என்றார்.
பாஜ மேலிடத்தின் அதிருப்தி காரணமாக ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசி உள்ளார். மேலும் அவர், எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டுமென கூறிய அடுத்த சில மணி நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கான ஆதரவு பலத்தை காட்ட பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜ முதல்வர்கள் உடன் செல்ல உள்ளனர்.