நடப்பது அரசியல் மாற்றமல்ல...கட்சியில் மாற்றம்... பாஜ, அதிமுக, தவெக சேர்ந்து வந்தாலும் தோற்பது உறுதி: இந்திய கம்யூனிஸ்ட் திட்டவட்டம்
விழுப்புரம்: பாஜ, அதிமுக, தவெக சேர்ந்து வந்தாலும் தமிழகத்தில் தோற்பது உறுதி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆளுநர் எத்தகைய விமர்சனங்கள், தாக்குதல்களை கொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக இருக்கின்றன. அரசு பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் தொடுப்பது சட்டப்படி பொருந்தாத ஒன்று. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் அரசியல் மாற்றம் கிடையாது. கட்சிகளில்தான் மாற்றம் நிகழ்ந்து வருகின்றன. புதுசா கட்சியில் இணைகிறார், கூட்டம் வருகிறது இவைகளெல்லாம் வெற்றியை தீர்மானிக்காது. இதையெல்லாம் திமுக கூட்டணி முறியடிக்கும். எங்கள் கூட்டணியை மக்கள் ஆதரிக்கிறார்கள். பிரிவினை கருத்துக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். வடமாநிலத்தில் இருக்கும் பிரிவினை கருத்துக்களை பாஜவினர் தமிழ் மண்ணில் விதைக்க பார்க்கிறார்கள். விஜய் தனித்து வந்தாலும் சரி, செங்கோட்டையன் போல் இன்னும் ஆயிரம்பேரை அழைத்து வந்தாலும் சரி, இவர்களெல்லாம் சேர்ந்து பாஜ, அதிமுக எல்லாம் ஒரே அணியில் சேர்ந்து வந்தாலும் சரி அவர்கள் தோற்கடிக்கப்படுவது உறுதி. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி பலத்தைவிட தமிழக மக்களின் கலாச்சாரம் எங்களுக்கு பலமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

