‘டான்சர்’ என சீண்டிய பாஜகவுக்கு பதிலடி;நடிகை ஹேமமாலினியை வம்புக்கு இழுத்த லாலு மகள்: பீகாரில் அனல் பறக்கும் வார்த்தைப் போர்
பாட்னா: பாஜகவின் ‘நடனக் கலைஞர்’ விமர்சனத்திற்கு, நடிகை ஹேமமாலினியைச் சுட்டிக்காட்டி லாலு பிரசாத் யாதவின் மகள் பதிலடி கொடுத்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பாக சப்ரா தொகுதியில் போட்டியிடும் போஜ்புரி சூப்பர் ஸ்டார் கேசரி லால் யாதவை, பாஜகவினர் ‘நாச்சனியா’ (நடனக் கலைஞர்) என்று கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ‘டான்சர்’ சர்ச்சை, சமீப வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், பாஜகவின் இந்த விமர்சனத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான ரோகிணி ஆச்சார்யா நேற்று கடும் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், நடிகையுமான ஹேமமாலினியின் திரையுலகப் பின்னணியைச் சுட்டிக்காட்டிய அவர், ‘கேசரி லால் யாதவின் தொழிலை விமர்சிக்கும் பாஜகவின் செயல் இரட்டை வேடம்’ எனக் குற்றம் சாட்டினார். மேலும் தனது ஆரம்பகட்ட பேச்சில் ஹேமமாலினியின் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பாஜகவில் உள்ள ‘நடனக் கலைஞர்’ ஒருவரைப் பற்றிய அவரது குறிப்பு, மூத்த நடிகையான ஹேமமாலினியையே இலக்காகக் கொண்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஹேமமாலினி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 
  
  
  
   
