பாதுகாப்பு வளையத்தை மீறி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து ரசிகையை கட்டிப்பிடித்த பாஜக நடிகர்: தேர்தல் பிரசாரக் களத்தில் பரபரப்பு
பாட்னா: பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த நடிகர் பவன் சிங்கை சந்திக்க பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்த பெண் ரசிகையை, அவர் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருந்த போது, போஜ்புரி நடிகரும், பாஜக தலைவருமான பவன் சிங், தனது கட்சிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி கதிஹார் மாவட்டம், ரோஷ்னா பஜாரில் நடந்த பேரணியில் பேசி முடித்துவிட்டு, தனது ஹெலிகாப்டரில் ஏறச் சென்றார். அப்போது, மாதூரி குமாரி என்ற பெண் ரசிகை, பாதுகாப்பு வளையங்களை மீறிக்கொண்டு அவரைச் சந்திக்க ஓடிவந்தார்.
அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கவனித்த பவன் சிங், உடனடியாக ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அந்த ரசிகையைக் கட்டிப்பிடித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது ஆசை நடிகரை சந்தித்ததோடு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதால் அந்த ரசிகை பெரும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர், பெண் காவலர் ஒருவர் அந்த ரசிகையை பாதுகாப்பு வளையத்தில் இருந்து அப்புறப்படுத்தினார். இதுகுறித்து மாதூரி குமாரி கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே நான் பவன் சிங்கின் ரசிகை. அவருடன் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு’ என்று தெரிவித்தார்.
