தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது; நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
விருதுநகர்: தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது. நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகர் சென்னை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பிறகு சாத்தூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பூத் நிலை முகவர்கள் மற்றும் வார்டு கிளை செயலாளர்கள் பிரநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது எதிரிகள் திமுக கூட்டணி உடையும் என ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி வந்தாலும் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 234 தொகுதிகளிலும் கலைஞர் போட்டியிடுவதாக நினைத்து களப்பணி ஆற்ற வேண்டும். விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை துவங்க உள்ளார். மாநில உரிமைகளைப் பாதுகாக்க, இந்தியாவிலேயே பாசிச பாஜவை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மட்டும் தான். நமது முதல்வர்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.
இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதனால் தான் ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்து வருகிறது. எவ்வளவு பிரச்னைகளைக் கொடுத்தாலும், தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறதே என்று சங்கிகளும், அவர்களது அடிபொடிகளும் எரிச்சலடைகின்றனர். அதனால் தான் நாள்தோறும் புதுப்புது பிரச்னைகளைக் கொண்டு வருகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது.
எப்படியாவது தமிழகத்தை சிதைக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றை மட்டும் நாம் சொல்லி கொள்கிறோம். கருப்பு, சிவப்பு கரை வேட்டி கட்டிய தொண்டர்கள் இருக்கும் வரை தமிழகத்தை சிதைக்க முடியாது. எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள், சோதனைகள், எதிரிகளை நாம் சந்தித்துள்ளோம். நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. சண்டை போடும் அளவு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என ஒன்றிய பாஜ அரசு ஏங்குகிறது. திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இன்னும் 75 ஆண்டுகள் ஆனாலும் எழுச்சியோடு திமுக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
* அதிமுகவில் தினமும் பல அணிகள் எடப்பாடி-அமித்ஷா பேக்கரி டீலிங்
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘எடப்பாடி பிரசாரத்தில் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இறுதியில் அவரும், அவரது ஓட்டுநரும் மட்டுமே மிச்சம் இருப்பார்கள் போல... எடப்பாடி பழனிசாமிக்கு கார் மாறுவதும், கால் மாறுவதும் புதிது கிடையாது. ஆம்புலன்ஸைப் பார்த்தாலே அவர் கோபப்படுகிறார். செங்கோட்டையன் ஹரித்துவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவைச் சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் நான்கு கார்கள் மாறி அமித்ஷாவைச் சந்திக்கிறார். வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்துப் போட்டதும், முகத்தைத் துடைத்தேன் என்கிறார்.
ஏசி காரிலேயே முகம் வியர்க்கிறது என்றால், அப்படி வியர்க்கும் அளவுக்கு என்ன நடந்தது? வடிவேலு படக் காமெடியில் வருகிற பேக்கரி டீலிங் நடந்திருக்கிறது. அமித்ஷா தான் தங்களது தலைவர் என்று அதிமுக தலைவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி என கொள்கை சார்ந்த 25 அணிகள் உள்ளன. ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன், தீபா, தீபா கார் டிரைவர் என இப்படியான பல அணிகள் உள்ளன.
சாத்தூரில் கூட 2 அணிகளாம். ஒன்று ராஜேந்திரபாலாஜி அணி, இன்னொன்று ராஜவர்மன் அணி என்று 2 அணிகள் இருக்கிறதாம். 2 நாளைக்குமுன் ஜெயலட்சுமி அணி ஒன்று உருவாகியுள்ளது. தினமும் ஒரு அணி அங்கு உருவாகிறது. இனி ஒரு தொகுதிக்கு ஒரு அணி உருவாகும்’’ என்றார்.
* வாரம் ஒருமுறை வருபவன் நான் அல்ல: விஜய் மீது தாக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணன் கோவிலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதியில் 7 தொகுதியை குறைக்க திட்டமிட்டார்கள். இதை கண்டறிந்து அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் நமது முதல்வர். ஒன்றிய பாஜ நிறைய தில்லுமுல்லு வேலை செய்யும். அடுத்த 6 மாதம் நீங்கள் ஓய்வு எடுக்க கூடாது. அதிமுக அண்ணா திராவிட முன்னேற்ற கழகமா, அமித்ஷா முன்னேற்ற கழகமா, அடிமை முன்னேற்ற கழகமா என்பது தெரியவில்லை.
பாஜ அதிமுகவை கொத்து புரோட்டா போல் போட்டு வைத்துள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும். அதை நான் வழி மொழிகிறேன். அப்போதுதான் தமிழக மக்களுக்கும் எங்களுக்கும் நல்லது. அடிமைகளுக்கு உதாரணம்தான் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்கு தேர்தல் மாறும் கூட்டணி அதிமுக கூட்டணி.வாரம் ஒரு முறை மட்டும் நான் வீட்டை விட்டு வெளியில் வருபவன் கிடையாது. தினந்தோறும் மக்களை சந்தித்து வருகிறேன். இவ்வாறு பேசினார்