என்னை சமாளிக்க 30 ஹெலிகாப்டர்கள் களமிறக்கம்: 37 வயது இளைஞரை கண்டு பாஜகவுக்கு பெரும் பீதி: முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி ஆவேசம்
பாட்னா: 37 வயது இளைஞனான தனக்கு பாஜக பயப்படுவதாகவும், தன்னை எதிர்கொள்ள 30 ஹெலிகாப்டர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், ஒரே நாளில் 18 தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பங்கா மாவட்டத்தில் உள்ள பெல்ஹாரில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய அவர், ‘என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்த அரசை நான் அமைப்பதை பிரதமர் மோடியோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எந்த அமைச்சராலோ தடுக்க முடியாது. ஒரு பீகாரி அனைவரையும் விட வலிமையானவன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘37 வயது இளைஞனான என்னைக் கண்டு பாஜக பயந்துபோய் உள்ளது. இதன் காரணமாகவே, பிரதமர் மோடி தனது கட்சி நிர்வாகிகள் பலரையும் பிரசாரக் களத்தில் இறக்கி, என்னை எதிர்கொள்வதற்காக மட்டும் 30 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்’ என்று குறிப்பிட்டார். ஏற்கனவே இரண்டு முறை துணை முதல்வராகப் பணியாற்றியுள்ள தேஜஸ்வி யாதவ், ‘மண்ணின் மைந்தன்’ என்ற கோஷத்தையும் தீவிரமாக முன்வைத்து வருகிறார். அவர் பேசுகையில், ‘பீகாரை வெளி ஆட்கள் ஆள முடியாது. இந்த மண்ணின் மைந்தன் மட்டுமே இங்கு ஆட்சி செய்வான்’ என்று கூறினார்.
இளைஞர்களை நோக்கிப் பேசிய அவர், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளில் இருந்து மாநிலத்தை விடுவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தார். ‘நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 20 ஆண்டுகள் கொடுத்தீர்கள். எனக்கு வெறும் 20 மாதங்கள் கொடுங்கள், அனைத்தையும் சரி செய்கிறேன்’ என்று அவர் உறுதியளித்தார்.
அராரியாவில் நடந்த மற்றொரு கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்குள்ள பகுதிகளில், ‘பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் நிர்வாகம் வேண்டுமென்றே வாக்குப்பதிவை தாமதப்படுத்துகிறது. எனவே, நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று அவர் குற்றம் சாட்டினார்.

